Published : 14 Aug 2024 04:45 AM
Last Updated : 14 Aug 2024 04:45 AM

சோழவரம் அருகே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு

கோப்புப் படம்

பொன்னேரி: சோழவரம் அருகே ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றி இடத்தை மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்டசோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் 14.5 ஏக்கர் பரப்பளவில் கிராம நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் தனியார் சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலம், வருவாய்த் துறையினரால் கடந்த2022-ம் ஆண்டு மீட்கப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தனியார் சோப் நிறுவனம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து, அலுவலகம் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை கட்டி பயன்படுத்தி வந்தது.

இதுதொடர்பாக கிராம மக்கள், வருவாய்த் துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, நேற்று அரசுக்கு சொந்தமான அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற இப்பணியில், பொக்லைன்இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிரடியாக அகற்றப்பட்டு, ரூ.150 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.

மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட இந்த நிலம் தொடர்பாக மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ரவுடி நாகேந்திரனுக்கு இடையே பிரச்சினை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x