Published : 06 May 2018 07:36 AM
Last Updated : 06 May 2018 07:36 AM

கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் எழுதுகின்றனர்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,255 மையங்களில் இன்று நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 1.07 லட்சம் மாணவர் கள் உட்பட நாடு முழுவதும் 13.26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ விதித்துள்ளது. வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்கள் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்வபவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத் துகிறது.

மொத்தம் 13.26 லட்சம் பேர்

2018-19 கல்வியாண்டுக் கான நீட் தேர்வுக்கு ஆன்லை னில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்கள், மாநி லப் பாடத்திட்டங்கள், திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிக்கும் 5,80,648 மாணவர்கள், 7,46,076 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 13,26,725 பேர் விண்ணப்பித்தனர். இதில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் 13.23 லட்சம் பேர், வெளிநாட்டினர் 621 பேர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1,842 பேர்.

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு 1,07,288 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) கடந்த மாதம் 16-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (மே 6) நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, நாமக்கல், சேலம், வேலூர், திருநெல் வேலி ஆகிய 10 நகரங்களில் உள்ள 170 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 136 நகரங்களில் மொத்தம் 2,255 மையங்களில் தேர்வு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடத்தப் படுகிறது.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடக்கிறது. மாணவர்கள் காலை 7.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். காலை 9.30 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு மையத்துக் குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

180 கேள்விகள்

பிளஸ் 1, பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்வி கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 720 மதிப்பெண். ஒவ்வொரு கேள்விக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரி யான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான விடைக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். தெரியாத கேள்விக்கு விடை அளிக்காமல் விட்டுவிட்டால் மதிப்பெண் குறைக்கப்படாது. தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படுகிறது.

கடும் கட்டுப்பாடுகள்

தேர்வு எழுத வருபவர்களுக்கு பல் வேறு கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ விதித்துள்ளது. மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை சட்டை அணிந்துவர வேண்டும். செருப்பு மட்டுமே அணியலாம். ஷூ, பெரிய பட்டன் வைத்த ஆடை அணியக்கூடாது. மாணவிகள் சல்வார் கமீஸ் உள்ளிட்ட சில ஆடைகளை மட்டும் அணியவேண்டும். கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், மோதிரம், பெல்ட், வாட்ச், தொப்பி போன்ற எதுவும் அணியக் கூடாது.

ஹால்டிக்கெட், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மட்டுமே தேர்வு மையத்துக் குள் கொண்டுவர வேண்டும். செல்போன் உள்ளிட்ட சாதனங்கள், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில் உட் பட வேறு எதுவும் எடுத்துவர அனுமதி இல்லை என்று பல கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ விதித்துள்ளது.

இதற்கிடையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெளிமாநிலங்களில் தேர்வு எழுதுபவர்கள் முன்கூட்டி புறப்பட்டுச் சென்றுள்ளனர். நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் உடன் செல்பவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக் காக ரூ.1,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயக்குமார் புகார்

இதனிடையே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை வேலப்பன்சாவடியில் நேற்று நடந்த வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வை எழுத உள்ளனர். அந்த விவரத்தை முன்னரே அரசுக்கு சிபிஎஸ்இ தெரிவிந்திருந்தால் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.

ஆனால், எதையுமே சொல்லாமல் போனது அவர்களின் குறைபாடு. இருப்பினும், வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு அரசு உதவி செய்துள்ளது. எனவே, அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x