Published : 13 Aug 2024 05:54 AM
Last Updated : 13 Aug 2024 05:54 AM
சென்னை: மனை, கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாக பதிவு செய்யும் வகையில், அதற்கான இ-சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழ்நாடுரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைஆணையம், அதற்காக கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை பதிவு செய்யவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் இ-சேவை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு உதவிக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மனைப்பிரிவை பொறுத்தவரை 20 ஆயிரம் சதுர மீட்டர் அதாவது 2 ஹெக்டேர் வரை ஒரு திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம், 2 ஹெக்டேருக்கும் அதிகமாக இருந்தால் ரூ.10 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
கட்டிடங்களை பொறுத்தவரை 20 வீடுகள் வரையிலான திட்டத்துக்கு ரூ.10 ஆயிரமும், 21 முதல் 50 வீடுகள் வரை ரூ.15 ஆயிரமும், 51 முதல் 100 வீடுகள் வரை ரூ.10 ஆயிரமும், 100 வீடுகளுக்கு மேல் உள்ள குடியிருப்புக்கு ரூ.25 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
வர்த்தக கட்டிடங்களாக இருந்தால், தரைப்பகுதியில் 1000 சதுரமீட்டர் வரை திட்டம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், 1001 முதல் 5 ஆயிரம் சதுர மீட்டர் என்றால் ரூ.15 ஆயிரமும், 5001 முதல் 10ஆயிரம் வரை ரூ.20 ஆயிரமும், 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் ரூ.25 ஆயிரமும் கட்டணம்செலுத்த வேண்டும். திட்டம் கலவையாக இருந்தால் அவற்றுக்குரிய கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
இந்த கட்டணத்தை, ஆன்லைன் மூலமோ அல்லது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்தில் உள்ள விற்பனை முனைய இயந்திரம் மூலமாகவோ செலுத்தலாம். இந்த வசதியானது ஏற்கெனவே ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். விண்ணப்பங்களுடன் ஆவணங்களை நகல்களாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT