Published : 13 Aug 2024 04:35 AM
Last Updated : 13 Aug 2024 04:35 AM

சட்டத் துறை சார்பில் ரூ.78 கோடியில் கட்டிடங்கள், விளையாட்டுத்திடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்தார்

சென்னை: சட்டத்துறை சார்பில் ரூ.78.18 கோடி செலவில், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டுத்திடல், ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நீதிமன்றக் கட்டிடங்கள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, புதிதாக பல்வேறு இடங்களில் நீதிமன்றக் கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், குதக்கோட்டை கிராமத்தில் ரூ.76 கோடியே 60 லட்சத்து 80 ஆயிரம் செலவில் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டிடம் மற்றும் விடுதிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டிடம், 26 வகுப்பறைகள், கருத்தரங்குக் கூடம், காணொலிக் காட்சி அறை, உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நிர்வாகத் தொகுதிக் கட்டிடங்கள், அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அடங்கிய நூலகக் கட்டிடங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம், விடுதி காப்பாளர் அறை, 250 மாணவியர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதிக் கட்டிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் ரூ.1 கோடியே 57 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.78.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் சட்டக்கல்லூரி கட்டிடம் மற்றும் விளையாட்டுத் திடலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, சட்டத்துறைச் செயலர் சி.ஜார்ஜ் அலெக்ஸாண்டர், சட்டக் கல்வி இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x