Published : 13 Aug 2024 04:40 AM
Last Updated : 13 Aug 2024 04:40 AM
சென்னை: சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு எவ்வளவு மானியம் வழங்குகிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி சி.எஸ்.ஐ. மறை மாவட்டத்தால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் ஆசிரியர்கள் நியமனங்களில் பிஷப், ஒருதலைபட்சமாக எந்த முடிவையும் எடுக்க தடை விதிக்கக்கோரி மனோகர் தங்கராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் “திருநெல்வேலி சி.எஸ். ஐ. மறைமாவட்டம் அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.600 கோடி மானியம் பெறுகிறது. மறை மாவட்டம் நடத்தும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அரசின் கருவூலத்தில் இருந்து பணம் செல்கிறது.
ஆனால், பணி நியமனங்களில் அரசின் விதிகள் பின்பற்றப்படுவதில்லை. மறை மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர் நியமனம் நடக்கிறது. இது மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது. சி.எஸ்.ஐ. மறை மாவட்டம் பின்பற்றும் விதிமுறைகளால், ஹசீனாவோ, ஹேமாவோ ஆசிரியர்களாக வர முடியாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மக்கள் பணத்தை வாரி வழங்கும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ‘ஆசிரியர் தகுதி தேர்வு’ மூலமே அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் எத்தனை? அதில் சிறுபான்மை மத அமைப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எத்தனை? அவற்றுக்கு தமிழக அரசு வழங்கும் மானியம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT