Published : 13 Aug 2024 05:20 AM
Last Updated : 13 Aug 2024 05:20 AM

அதிக மன அழுத்தம் இருந்தால் இதய ரத்த குழாயில் பாதிப்பு ஏற்படலாம்: ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்

சென்னை: அதிக மன அழுத்தம் இருந்தால் இதய ரத்த குழாயில் பாதிப்பு ஏற்படலாம் என்று சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் இதய நல முதுநிலை மருத்துவ நிபுணர் மருத்துவர் எஸ்.தணிகாசலம், பேராசிரியர் நாகேந்திர பூபதி ஆகியோர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுவாக சர்க்கரை நோய், உயர் கொழுப்பு சத்து, உடல் பருமன், புகைப் பிடித்தல், போதிய உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களால் இதய ரத்த குழாய்களில் அடைப்பு மற்றும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அத்தகைய எந்த பாதிப்பும் இல்லாமல் 60 வயது பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவருக்கு இதய ரத்த குழாயில் லேசான அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதற்கு அடுத்த நாளில் நெஞ்சுவலி அதிகரிக்கவே, மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் ரத்த குழாயில் பெரும் கிழிசல் இருந்ததும், அதனால், ரத்த ஓட்டம் தடைபடுவதும் கண்டறியப்பட்டது.

ரத்த குழாய்களில் கிழிசல்: இதையடுத்து கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும், மன அழுத்தத்தை குறைப்பது உள்ளிட்ட பயிற்சிகளும், மருத்துவ அறிவுரைகளும் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டன. பொதுவாகவே 50 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு அதிக மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது இதய ரத்த குழாய்களில் கிழிசல் ஏற்படுகிறது.

எனவே, அத்தகைய பாதிப்புகள் உள்ள பெண்கள் நெஞ்சு வலி ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x