Published : 13 Aug 2024 05:15 AM
Last Updated : 13 Aug 2024 05:15 AM
சென்னை: சென்னை வளர்ச்சி கழகம், பன்னாட்டு தமிழ்மொழி பண்பாட்டு கழகம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் சார்பில் சென்னையில் 2-ம் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு நேற்று தொடங்கியது.
சென்னை வளர்ச்சி கழகம் மற்றும் பன்னாட்டு தமிழ்மொழி பண்பாட்டு கழக தலைவர் விஆர்எஸ். சம்பத் வரவேற்றார். விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. மாநாட்டு மலரை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, இந்தி திணிப்பு உட்பட பல்வேறு வழிகளில் தமிழ் மொழியை ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ் மொழி உணர்வை நாம் எல்லோரிடமும் வளர்க்க வேண்டும் என்றார். அமைச்சர் ரகுபதி, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வியில் தமிழ் மொழியின் பங்கு அளப்பரியது என்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக அயலக தமிழர் நல வாரியமும், அவர்களது குழந்தைகள் தமிழின் பெருமையை அறிந்து கொள்வதற்காக தமிழகத்தில் சுற்றுலா செல்ல ‘வேர்களை தேடி’ என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரா.வேல்ராஜ் தலைமை உரையாற்றினார். விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், விஜிபி நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மைய இயக்குநர் பா.உமா மகேஸ்வரி நன்றி கூறினார். 2 நாள் மாநாடு இன்று நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT