Published : 01 May 2018 10:18 AM
Last Updated : 01 May 2018 10:18 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 மாதங்களில் மாயமான 40 இளம்பெண்களில் 34 பேர் மீட்பு: காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் காணாமல் போன 40 இளம்பெண்களில் 34 பேர் மீட்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் கீழ், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 5 உப கோட்டங்கள் உள்ளன. இந்த உப கோட்டங்களின் கீழ், 29 காவல் நிலையங்கள் உள்ளன.

இந்த காவல் நிலையங்களில், ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் ஒன்று அல்லது 2 நாளுக்கு ஒருமுறை ஓர் இளம்பெண் மாயமானதாக புகார் பதிவாவது வழக்கமாக உள்ளது. அந்த எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இச்சூழலில், திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக இளம்பெண்கள் அதிக அளவில் காணாமல் போயுள்ளதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சிபி சக்ரவர்த்தி நேற்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இன்று வரை (கடந்த 4 மாதங்கள்) 40 இளம் பெண்கள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 34 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 6 பேரை விரைந்து, கண்டுபிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களின் வழக்குகளை கண்காணிக்க மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தின் துணைக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன இளம்பெண்களை விரைவாக கண்டுபிடிக்க ஏதுவாக, வழக்கு பதிவாகும் காவல் நிலையங்களில், ஒரு போலீஸார் நியமிக்கப்பட்டு, தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

காணாமல் போகும் இளம்பெண்களில் ஒரு பிரிவினர், தேர்வு தோல்வி பயத்தில் வீட்டிl iருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்குவதும், சிலர் காதலர்களோடு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள 044- 27663555 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களை கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x