Published : 12 Aug 2024 03:48 PM
Last Updated : 12 Aug 2024 03:48 PM
சென்னை: “தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், திமுக அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “ஆவடி அருகே, பாதாளச் சாக்கடையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த வாரம், கடலூரில், அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காமல், தூய்மை பணியாளர்களைப் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்ய வைத்ததற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம்.
ஆனால் அதன் பின்னரும், திமுக அரசு, ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யாததால், மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், ஊழியர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது, அம்மாநில அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், தமிழகத்தில், நாட்டிலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டும், ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
தமிழகத்தில், பாதாளச் சாக்கடை, கழிவு நீர் அகற்றும் பணியில் உயிரிழப்புகள் தொடர்ந்தாலும், திமுக அரசு எந்தக் கவலையும் இல்லாமல், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போது உயிரிழந்துள்ள ஊழியர் குடும்பத்துக்கு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT