

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அசோக் வரதன் ஷெட்டியை அந்தப் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சி.ஆரோக்கியசாமி மனு தாக்கல் செய்துள்ளார். “இந்திய கடற்படையில் பணியாற்றியுள்ள நான், வணிக மேலாண்மையில் (நிர்வாகம்) முதுநிலைப் பட்டம் உள்பட போதுமான கல்வித் தகுதியைப் பெற்றுள்ளேன். கடற்படையில் நிர்வாகம், திட்டமிடல், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளேன்.
இந்நிலையில் சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் வரதன் ஷெட்டியை துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.
எனினும், கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தகுதிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் வரதன் ஷெட்டிக்கு இல்லாத நிலையில், அவரை துணைவேந்தராக நியமனம் செய்தது சரியல்ல. ஆகவே, எந்தத் தகுதியின் கீழ் துணைவேந்தராக பதவியில் நீடிக்கிறார் என அவரிடம் விளக்கம் கேட்கவும், அவரை தகுதி நீக்கம் செய்திடவும் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்'' என்று ஆரோக்கியசாமி தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், இது தொடர்பாக யு.ஜி.சி. உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.