Published : 12 Aug 2024 10:31 AM
Last Updated : 12 Aug 2024 10:31 AM
மேட்டூர்: மேட்டூர் அருகே கால்பந்து போட்டியின் போது, சரியாக விளையாடாமல் இருந்ததாக குற்றம் சாட்டி, மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பள்ளிகளுக்கு இடையேயான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அதே பள்ளியில் நடைபெற்றன. இதில், கால்பந்து இறுதிப் போட்டியில் கொளத்தூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் மோதினர்.
இந்த போட்டியில் முதல் பாதியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சரிவர விளையாடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில்அமர வைத்து கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.
அப்போது, பள்ளி ஆசிரியர்களும் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர்.
2-ம் பாதியில் சிறப்பாக ஆடினர்: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், இறுதிப் போட்டியில் 2-ம் பாதியில் சிறப்பாக ஆடி கொளத்தூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கல்வி அதிகாரி நடவடிக்கை: இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கபீரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை தாக்கியது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT