

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பி.ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப் பட்டுள்ளார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்தவர் பி.ஜெய்னுல் ஆபிதீன். இவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த 12-ம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:
பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது கூறப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விசாரிக்கப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார். இனிவரும் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர முடியாதபடி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்துக்கு பிறகு நடக்கவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முழு விளக்கம் அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “ஜமாஅத் என்பது கட்டுப்பாடுமிக்க ஒரு அமைப்பு. எந்த ஒரு தவறுக்கும் இதில் இடம் இல்லை. அதனால்தான் ஜெய்னுல் ஆபிதீன் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 21 பேர் கடந்த 12-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில் 21 பேரும் கையெழுத்திட்டு இருக்கிறோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்.