நடிகை சித்ரா
நடிகை சித்ரா

நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் விடுதலை: திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Published on

திருவள்ளூர்: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிச. 9-ம் தேதி பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவா் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், கடந்த ஆண்டு சித்ராவின் கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீ்ன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூா் மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் 56 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. காவல் துறை தரப்பில் சித்ராவின் கணவர் தற்கொலைக்கு தூண்டியதாக 498 ஏ மற்றும் 306 ஐபிசி பிரிவுகளின்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. காவல் துறை தரப்பில் போதிய ஆதாரங்கள், குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, இந்த வழக்கில் இருந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in