Published : 15 May 2018 07:49 AM
Last Updated : 15 May 2018 07:49 AM

வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் சேர மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் 18-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று துணைவேந்தர் கே.ராமசாமி தெரிவித்தார்.

வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கை குறித்த தகவல் அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியது:

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகளும், 26 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, பிடெக் வேளாண்மைப் பொறியியல், உயிர்த் தொழில்நுட்பவியல், உயிர்த் தகவலியல், வேளாண்மைத் தகவல் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவற்றுக்கு வரும் 18-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 7-ம் தேதி சிறப்புப் பிரிவினர், 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பொதுப்பிரிவினர், 16-ந் தேதி தொழிற்கல்வி பிரிவு, 17 மற்றும் 18-ம் தேதிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு கலந்தாய்வு நடக்கும்.

2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். ஆகஸ்டு 1-ம் தேதி கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும். இம்மாதம் 31-ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவு பெறும். இந்த ஆண்டு முதல்முறையாக ஒற்றைச்சாளர முறையில், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.

பகுதிநேர பொறியியல் படிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 6 வகையான பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர ஏப்ரல் 5 முதல் மே 10 வரை விண்ணப்பித்தவர்களின் விவரம் 19-ம் தேதி ஆன்லைனில், வெளியிடப்படும்.

இதுதொடர்பாக பகுதிநேர மாணவர் சேர்க்கை செயலாளர் வி.செல்லதுரை, 'தி இந்து'விடம் கூறியது: 26, 27-ம் தேதிகளில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடக்கும். சான்றிதழ் சமர்ப்பிக்காமல் விட்டிருந்தால், அப்போது நேரில் வந்து சமர்ப்பிக்கலாம். 30 அல்லது 31-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 2-ல் மாநில அளவிலான கலந்தாய்வு, கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சிஐடி) நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x