Published : 02 Aug 2014 12:05 PM
Last Updated : 02 Aug 2014 12:05 PM

அம்மா திட்ட முகாம்: 1.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து வரும் அம்மா திட்ட முகாம்களில் இதுவரை பெறப்பட்ட 2,35,418 மனுக்களில் 1,31,065 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது அம்மா திட்ட முகாம். இம்முகாம்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 705 வருவாய் கிராமங்களில் முதல் சுற்று முடிந்து, தற்போது இரண்டாம் சுற்று நடந்து வருகிறது.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை திருவள்ளூர், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, திருவொற்றியூர், பொன்னேரி, திருத்தணி ஆகிய வட்டங்களில் உள்ள நத்தம்மேடு, குத்தம்பாக்கம், பாதிரிவேடு, வெளியகரம் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், திருவொற்றியூர்- மாநகராட்சி பூந்தோட்ட பள்ளி அருகில், ஆரணி- மாதவரம் அரசு ஆரம்பப் பள்ளி, வி.கே.என்.கண்டிகை கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம்கள் நடந்தன.

அதில், பூந்தமல்லி வட்டத்துக்குட்பட்ட குத்தம்பாக்கம் கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது:

கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் வரை செல்லும் அலைச்சல், செலவினங்களை தவிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு அம்மா திட்ட முகாம், திருவள்ளுர் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துவரும் அம்மா திட்ட முகாம்களில், இதுவரை 2,35,418 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 1,31,065 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு சாதி, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x