Published : 06 May 2018 10:10 AM
Last Updated : 06 May 2018 10:10 AM

ஹைட்ரோகார்பனை எதிர்த்து போராடியவர்களுக்கு சம்மன்: நெடுவாசல் விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கீரமங்கலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் அப்பகுதி விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அறிவிக்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

மே 15-ல் ஆஜராக உத்தரவு

இதுதவிர புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வப்போது போராட்டம் நடைபெற்றது. இதில், கீரமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சேந்தன்குடியைச் சேர்ந்த பாமக நிர்வாகி தங்க.கண்ணன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைபாண்டி உள்ளிட்ட 7 பேர் மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் பொது இடத்தில் சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின்படி மே 15-ம் தேதி ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் இவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து தங்க.கண்ணன் கூறியது: தமிழகம் முழுவதும் ஹைட்ரோகார்பனை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. நெடுவாசலில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் நாங்கள் கலந்துகொண்டதோடு உள்ளூர் என்பதால் கீரமங்கலத்தில் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தினோம். அன்றைய தினம் காவல்துறைகூட போராட்டத்தை எதிர்க்கவில்லை.

வழக்கு பதிவு செய்ததுகூட நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்த பிறகுதான் தெரிகிறது. இவ்வளவு நாள் இருந்துவிட்டு தற்போது சம்மன் அனுப்பியது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. எனினும் இதை சட்டப்படி சந்திப்போம் என்றார்.

இதுகுறித்து நெடுவாசல் போராட்டக் குழுவினர் கூறியது: ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என ஒப்பந்தம் எடுத்துள்ள ஜெம் நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதால் திட்டத்தை வரவிடாமல் தடுப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு கீரமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு உயர்மட்டக் குழு கூடி ஆலோசிக்க உள்ளது. இவ்வாறு நெடுவாசல் போராட்டக் குழுவினர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x