சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் வீட்டில் இன்று (சனிக்கிழமை) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை மீட்ட போலீஸார், அவற்றை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்க உதவியதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக. அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார்.

இந்த வழக்கில் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், திருநெல்வேலி பழவூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைக்கவே, அவருடன் சேர்ந்து தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், அவர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “பொன்.மாணிக்கவேல், காதர் பாஷா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். சிலை கடத்தல் தொடர்பான உண்மை வெளிவர சிபிஐ விசாரணைதான் சரியாக இருக்கும். எனவே, நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், டெல்லி சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து, காதர் பாஷா, சுப்புராஜ் ஆகியோர் மீது சிலை கடத்தலுக்கு உதவியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட, அந்த முதல் தகவல் அறிக்கையைப் பயன்படுத்தி கடந்த 2022-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சென்னை பாலவாக்கத்தில் வசித்து வரும் பொன்.மாணிக்கவேல் வீட்டிற்கு இன்று வந்த 5-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து இன்று காலை முதல் அங்கு சோதனை நடத்தினர். வழக்கு தொடர்பாக பொன்.மாணிக்கவேலிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in