Published : 31 May 2018 09:35 AM
Last Updated : 31 May 2018 09:35 AM

காவல் துறை பணிக்கு மனவலிமை, தனிமனித ஒழுக்கம் அவசியம்: காவல் உயர் பயிற்சியக டிஐஜி கருத்து

‘காவல் துறை பணிக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம்' என, சென்னை-ஊனமாஞ்சேரி காவல் உயர் பயிற்சியகத்தின் டிஐஜி அறிவுச்செல்வம் தெரிவித்தார்.

திருவள்ளூரில் செயல்படும் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில், தமிழக காவல் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 196 பேர், கடந்த 7 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர். இதில், காவல் நிலைய பணி, ஆயுதப்படை பணி மற்றும் காவல் நிலையங்களுக்கு தகவல் பரிமாற்றத் திறன், சட்டவிதிமுறைகள், துப்பாக்கிச் சுடும் பயிற்சி போன்ற அடிப்படை பயிற்சிகளும், சிலம்பம், கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகளும் புதிய காவலர்களுக்கு அளிக்கப்பட்டன.

இந்த பயிற்சியின் நிறைவு விழா, நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் அருகே உள்ள கவாத்து மைதானத்தில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், காவல் பயிற்சி பள்ளியின் முதல்வருமான சிபி சக்ரவர்த்தி, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், சென்னை- ஊனமாஞ்சேரி காவல் உயர் பயிற்சியகத்தின் டிஐஜி என்.அறிவுச்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில், சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட காவலர்களுக்கு தங்கப்பதக்கம், மற்ற காவலர்களுக்கு சான்றிதழ்களை டிஐஜி வழங்கினார். தொடர்ந்து, பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பு நிகழ்வு நடந்தது.

காவலர் பயிற்சியின் நிறைவு விழாவில், டிஐஜி அறிவுச்செல்வம் பேசியதாவது:

காவல் துறை பணி, மற்ற துறை பணிகளில் இருந்து வேறுபட்டது. களப்பணியான காவல் துறை பணிக்கு உடல் திறன் மற்றும் மனவலிமை அவசியம். காவல் துறை பணி சீருடை பணி என்பதால் சமுதாயம் உற்று நோக்கும். இப்பணிக்கு தனிமனித ஒழுக்கம் என்பது அவசியம். காவல்துறை பணியில் பாரபட்சமின்றி, சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு கண்ணியத்தோடு, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x