Published : 07 May 2018 08:39 AM
Last Updated : 07 May 2018 08:39 AM

மதுரை, சேலத்தில் இந்தியில் வினாத்தாள்: 5 மணி நேர தாமதத்துக்குப் பிறகு தொடங்கிய ‘நீட்’ தேர்வு

மதுரை மற்றும் சேலத்தில் நீட் தேர்வு மையத்தில் தமிழுக்குப் பதிலாக இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்த குளறுபடியால் சுமார் 5 மணி நேர தாமத்துக்குப் பிறகு நீட் தேர்வு தொடங்கியது.

மதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 720 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத காலை 9.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. அனைவருக்கும் தமிழ், ஆங்கிலம் மொழி வினாத்தாள்கள் தேர்வு கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டன. இதில் 120 பேருக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் இந்தி மொழியில் இருந்தன. தமிழ் மொழி இடம் பெறவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் கூறினர்.

இது குறித்து மதுரையில் நீட் தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளர் செல்வராஜிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தேர்வுக்கு வராதவர்களின் வினாத்தாள்களை ஏற்பாடு செய்து, 24 பேருக்கு மட்டும் காலையில் சக மாணவர்களுடன் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்தனர். மீதம் உள்ள 96 பேருக்கு பிற்பகல் 2.50 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதன் பிறகே இவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர்.

சேலத்தில்

சேலம் மெய்யனூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி நீட் தேர்வு மையத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து மதியம் 2 மணிக்கு மேலாகியும் 50 சதவீதம் மாணவர்கள் வெளியே வரவில்லை. இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர் தேர்வு மையத்தை முற்றுகையிட்டு, தாமதம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அங்கு வந்த தேர்வு மைய அதிகாரிகள், “தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் வந்துவிட்டது. எனவே, வினாத்தாள் மாற்றிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக மாணவர்களுக்கு நேரம் வழங்கியிருக்கிறோம். மேலும், மாணவர்களுக்கு மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார். இதனால் இந்த மையத்தில் சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகே சில மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர்.

மாணவி கண்ணீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன், இவரது மகள் ஜீவிதா. இவர் நீட் தேர்வு எழுத நேற்று சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்துக்கான நுழைவுச் சீட்டுடன் வந்தார். தேர்வு மைய அதிகாரிகள், மாணவி ஜீவிதாவின் பதிவெண்ணை ஆய்வு செய்தபோது, அவருக்கு கேரள மாநிலம் கோட்டயத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. அதிர்ச்சியடைந்த மாணவி கண்ணீருடன் தேர்வு மையத்தில் இருந்து வெளியேறினார்.

இதுகுறித்து ஜீவிதாவின் பெற்றோர் கூறும்போது, “எங்கள் மகள் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தபோது, முதலில் கேரள மாநிலம் கோட்டயத்தில் தேர்வு மையத்தை குறிப்பிட்டு தேர்வு நுழைவுச் சீட்டு வந்தது. மீண்டும் விண்ணப்பித்தபோது சேலம் தேர்வு மையத்தை குறிப்பிட்டு தேர்வு நுழைவுச் சீட்டு வந்தது” என்றனர்.

மாணவர் மயக்கம்

கோவை புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் புளியம்பட்டியைச் சேர்ந்த சபரி (17) என்ற மாணவர் தேர்வெழுதினார். அப்போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தேர்வு மைய அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x