Published : 30 Aug 2014 10:00 AM
Last Updated : 30 Aug 2014 10:00 AM

3 மேயர், உள்ளாட்சி பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: கோவையில் கணபதி ப.ராஜ்குமார் போட்டியிடுகிறார்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கான அதிமுக வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான அதிமுக வேட்பாளராக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி ப.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளராக திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் இ.புவனேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளராக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம்- அரக்கோணம் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அரக்கோணம் நகர எம்ஜிஆர் இளைஞரணித் தலைவர் எஸ்.கண்ணதாசன், கடலூர் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக கடலூர் நகரச் செயலாளர் ஆர்.குமரன், கடலூர் மாவட்டம்- விருத்தாசலம் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் பி.அருளழகன், நீலகிரி மாவட்டம்- குன்னூர் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நீலகிரி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் டி.சரவணகுமார், புதுக்கோட்டை நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆர்.ராஜசேகரன், திண்டுக்கல் மாவட்டம்- கொடைக்கானல் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மறைந்த மாரிமுத்துவின் மகன் எம்.ஸ்ரீதர், ராமநாதபுரம் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மறைந்த நகரமன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் மகள் எஸ்.சந்தானலெட்சுமி, திருநெல்வேலி மாவட்டம்- சங்கரன்கோவில் நகர மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சங்கரன்கோவில் நகர 18-வது வார்டு இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான 12 வேட்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர் பதவிகளுக்கான 53 வேட்பாளர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான 7 வேட்பாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கான 101 வேட்பாளர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான 11 வேட்பாளர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான 82 வேட்பாளர்கள் ஆகியோரின் பெயர்களையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x