மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நவீன வாகனங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

போலீஸார் பயன்படுத்தும் ஏடிவி வாகனம்  | படம்: தி இந்து
போலீஸார் பயன்படுத்தும் ஏடிவி வாகனம்  | படம்: தி இந்து
Updated on
1 min read

சென்னை: சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை மணல் பரப்பில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ரூ.48 லட்சத்தில் 3 நவீன வாகனங்களை வாங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இவை இருப்பதால் இவற்றின் தூய்மை மற்றும் மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைகளையும் ஒழுங்குபடுத்தி வருகிறது மாநகராட்சி. இந்நிலையில், மாநகராட்சியால் அனுமதிக்கப்படாத பகுதிகளில் அவ்வப்போது சிலர் கடைகளை அமைத்து உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்கள் திடக்கழிவு பொருட்களையும் முறையாக அப்புறப்படுத்தாமல், அங்கேயே போட்டு, அப்பகுதிகளை அசுத்தப்படுத்தியும் வருகின்றனர். இதனால், சில தினங்களுக்கு முன்பு பெசன்ட்நகர் கடற்கரையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி அகற்றியது. இக்கடைகளை கண்காணிப்பதும், அகற்றுவதும் மாநகராட்சி பணியாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. அதனால் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளில் ரோந்து சென்று கண்காணிப்பதற்காக தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சம் செலவில் 3 நவீன ரோந்து வாகனங்களை (All Terrain Vehicle- ATV) வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரிகள், ''ஒரு முறை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிவிட்டால், மீண்டும் அந்த கடைகளை வைக்காமல் இருப்பதை கண்காணிக்க இந்த ஏடிவி வாகனம் உதவியாக இருக்கும். இந்த வாகனம் தார் சாலைகளிலும், கடற்கரை மணல் பரப்பிலும், கரடுமுரடான பகுதிகளிலும் எளிதில் செல்லக்கூடியது. இந்த வாகனத்தால் எங்கள் கடற்கரை ரோந்து பணிகள் எளிதாகும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in