பள்ளிகளில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க பழனிசாமி, அன்புமணி வலியுறுத்தல்

பள்ளிகளில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க பழனிசாமி, அன்புமணி வலியுறுத்தல்

Published on

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், `சென்னை, பழவந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் புத்தகப் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறையை பாழாக்கும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய காவல்துறையை, எதிர்கட்சியினரை மட்டும் பழிவாங்கும் ஏவல் துறையாக பயன்படுத்தும் திமுகவுக்கு எனது கண்டனம். எதிர்கால தலைமுறையினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற இனியாவது போதைப் பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்

இதேபோல, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், `சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் வகுப்பு நேரத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மாணவருக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளிக்கு அருகிலேயே மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in