Published : 09 Aug 2024 05:10 AM
Last Updated : 09 Aug 2024 05:10 AM

ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக கோயில் ராஜகோபுரத்தை நகர்த்தி வைத்து மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு

துர்க்கை அம்மன் கோயிலின் ராஜகோபுரம்.

சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் அமையவுள்ள மெட்ரோ இரண்டாம் கட்டரயில் பணிகளுக்காக பழமைவாய்ந்த கோயில் ராஜகோபுரத்தை 5 மீட்டர் உள்ளே நகர்த்தி வைத்துவிட்டு, பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் கோபுரங்கள் மற்றும் அங்குள்ள ராஜ கோபுரத்தை இடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் தலைவரான மயிலாப்பூரை சேர்ந்த பி.ஆர்.ரமணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோயில்களுக்கும், கோபுரங்களுக்கும் எந்த சேதமும் இல்லாமல் மெட்ரோ பணிகளை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு நேரில் களஆய்வு மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, வழக்கறிஞர் ராமமூர்த்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு வழக்கறிஞர் ரீட்டா சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.

இருதரப்பு வாதங்கள் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபுவின் களஆய்வு அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மெட்ரோ ரயில் இரண்டாம்கட்ட பணிகள் பூமிக்கு அடியில் 30 அடி ஆழத்தில் நடைபெறும்போது துர்க்கை அம்மன், ஸ்ரீ ரத்தின விநாயகர் கோயிலின் ராஜகோபுரம் நிச்சயமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே, ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் 5 மீட்டர் தூரத்துக்கு உள்புறமாக நகர்த்தி வைத்துவிட்டு, பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் அமைக்கவேண்டும்.

ரத்தின விநாயகர் கோயிலை இடிக்க நேரிட்டால் பாலாலயம் நடத்தி அப்புறப்படுத்திவிட்டு, பணிகள் முடிந்ததும் அதேஇடத்தில் அமைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும்வெளியேறும் வழிகளை கோயில்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வண்ணம் அருகில் உள்ள காலியிடத்துக்கு மாற்ற வேண்டும்.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி மீண்டும் கோயிலுக்கு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதுகுறித்தும் பரிசீலிக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x