ஒரே குற்ற சம்பவத்துக்காக இருதரப்பினர் புகார் அளித்தால் என்ன செய்ய வேண்டும்? - விதிமுறைகளை வகுத்து கோர்ட் உத்தரவு

ஒரே குற்ற சம்பவத்துக்காக இருதரப்பினர் புகார் அளித்தால் என்ன செய்ய வேண்டும்? - விதிமுறைகளை வகுத்து கோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஒரே குற்ற சம்பவத்துக்கு இருதரப்பும் மாறி மாறி புகார் அளித்தால் அந்த வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பாலாஜி, ராஜகுமாரி ஆகியோர் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கைரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அப்போது அவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்த கார்த்திக் என்பவரும் தனது புகார் மீது விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல இருதரப்பு தொடர்புடைய பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

3 நீதிபதிகள் அமர்வு: ஒரே குற்ற சம்பவத்துக்காக இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி புகார் கொடுத்தால் அந்த வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து ஆராய 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வை ஏற்படுத்தி தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம்.நிர்மல்குமார், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய முழு அமர்வுவிதிமுறைகளை வகுத்து பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஒரே குற்ற சம்பவத்துக்காக இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி புகார் அளித்தால் அந்த வழக்கில் போலீஸார் பாரபட்சமின்றி இருதரப்பு புகார் மீதும் முறையாக விசாரணை நடத்த வேண்டும். 2 புகார்களில் ஒரு புகாரில் உண்மை இல்லை என தெரியவந்தால் அதைகவனமாக பரிசீலித்து முடித்து வைக்க வேண்டும். அதன்பிறகு எந்த புகாரில் உண்மை இருக்கிறதோ அந்த புகார் மீது பதியப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணையின்போது அளிக்கப்பட்ட இருதரப்பு புகார் மற்றும் வழக்கின் விசாரணைக்காக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றையும் இறுதி அறிக்கையில் சேர்த்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.

ஒருவேளை இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரில் உண்மையான குற்றவாளி யார் என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்றால் அந்த இருபுகார்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான காரணம் குறித்தும் விசாரணை அதிகாரி விளக்க வேண்டும்.

ஒரே விசாரணை நீதிமன்றத்தில்.. அந்த இரு குற்றப்பத்திரிகைகளையும் குற்றவியல் நடுவர்கள் கவனமாக ஆய்வு செய்து அவை இயந்திரத்தனமாக தயாரிக்கப்பட்டு இருந்தால் அவற்றை மீண்டும் விசாரணை அதிகாரிக்கே திருப்பி அனுப்ப வேண்டும். இரு வழக்குகளும் ஒரே விசாரணை நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in