Published : 09 Aug 2024 04:50 AM
Last Updated : 09 Aug 2024 04:50 AM
சென்னை: காஞ்சிபுரத்தில் கைத்தறி துறை சார்பில் நடைபெற்ற 10-வது தேசிய கைத்தறி தின விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று கைத்தறி கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது, ``2015-ம் ஆண்டுமுதல் ஒவ்வோர் ஆண்டும் ஆக.7-ம் தேதி கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை ஆக.7முதல் 9-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரைநடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஜவுளிகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது'' என்றார். பின்னர் பாரம்பரிய காஞ்சிபுரம் ரக சேலைகளை உற்பத்தி செய்துவரும் திறன்மிகு 10 நெசவாளர்களை கவுரவித்து, மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் கைத்தறி துறை இணைந்து 60 கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் தலா ரூ.1,25,000 வீதம் ரூ.75 லட்சம் கடனுதவி அணைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு கைத்தறி துறையின் நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.36.70 லட்சத்துக்கான பாதுகாப்பு திட்ட காசோலைகளும், தமிழ்நாடு அரசு கைத்தறி துறையின் நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ரூ.1200 மாத ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், கைத்தறி துறை துணை இயக்குநர் ச.மணிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT