கும்பகோணம்: சாதி ரீதியாக பேசியதாக தமிழ் பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
Updated on
1 min read

கும்பகோணம்: சாதி ரீதியாகவும், பெண்களைத் தரக்குறைவாகவும் பேசியதாகக் கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரைக் கண்டித்து மாணவ - மாணவியர் இன்று கல்லூரி முதல்வர் அறையின் முன் தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் முதுகலை தமிழ்த் துறை பேராசிரியராக இருப்பவர் ஜெயவாணிஸ்ரீ. இவர், அண்மையில் முதுகலை தமிழ்த் துறை 2-ம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுத்தார். அப்போது அவர் சாதி ரீதியாகவும், பெண்களைத் தரக்குறைவாகவும் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் புகார் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், அந்தப் பேராசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து இந்திய மாணவர் சங்க நிர்வாகி பரசுராமன் தலைமையில், கிளைத் தலைவர் ஜேம்ஸ், நிர்வாகி சீதாலட்சுமி மற்றும் தமிழ்த் துறையில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் (இந்தக் கல்லூரிக்குள் பெண்களுக்கும் தனியாகக் கலைக் கல்லூரி உள்ளது) வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி முதல்வர் அறை முன்பாக தரையில் அமர்ந்து அந்தப் பேராசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், கல்லூரி முதல்வர் மாதவி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவியரிடம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாகவும், கல்லூரி நிர்வாகம், அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in