வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து ஆக.12-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து ஆக.12-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி
Updated on
2 min read

சென்னை: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான மனிதத்தன்மை அற்ற வெறிச்செயலை கண்டித்து வரும் திங்கள்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தின் மக்களை, பாகிஸ்தான் கொடுமை செய்தபோது வங்கதேசத்தைக் காப்பாற்றி தனி நாடாக சுதந்திரமாக செயல்பட இந்தியா உதவியது. மேலும், அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பலவிதங்களிலும் நமது நாடு துணை நின்று வருகிறது. எவ்வளவு உதவிகள் செய்தாலும் அடிப்படைவாத மதவெறி, நன்றி விசுவாசம் பார்ப்பதில்லை என்பதற்கு தற்போது நடக்கும் சம்பவங்கள் உலகிற்கு உணர்த்துகின்றன. வங்கதேசத்தில் நடப்பது இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரம் என முதலில் செய்திகள் தெரிவித்தாலும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அதன் பின்புலம் வேறுமாதிரி இருக்கிறது.

இந்துக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்துக்களின் நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாகின்றன. இந்து கவுன்சிலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் இந்து என்பதாலேயே அவர் வீட்டில் தீ வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு விதமாக இந்துக்களின் மீதும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய குடியுரிமை சட்ட (சிஏஏ) திருத்தத்தை எதிர்த்தவர்கள், வங்கதேசத்தில் இந்துக்கள் குறி வைத்து தாக்கப்படுவதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

மதத்தின் பெயரால் வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்படும் போது உயிர் மட்டும்மாவது மிஞ்சினால் போதும் என நாட்டை விட்டு வெளியேறி வரும்போது இந்தியா அரவணைக்கத்தானே வேண்டும்? ஆனால் இஸ்லாமிய நாடுகளாக உருவான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டு இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களையும் அகதிகளையும் ஒன்றாக பேசியவர்கள், சிஏஏ சட்டத்தை விமர்சனம் செய்த இண்டியா கூட்டணி கட்சியினர் என்பதை நமது மக்கள் உணர வேண்டும்.

தற்போது வங்கதேசத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமான வன்முறையால் இந்துக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மீண்டும் மீண்டும் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் சூழல் ஏற்படுவதை தடுக்க இதில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும். உடனடியாக இனவாத, மதவெறி கலவரத்தை ஒடுக்க சர்வதேச படைகளை அனுப்பிட வேண்டும். கண் எதிரே அக்கிரமம் நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு பிறகு ஆலோசனை நடத்தி வருத்தம் தெரிவிப்பதால் என்ன பலன் இருக்க போகிறது.

எனவே உடனடியாக ஐ.நா.வும், இந்திய அரசும் தக்க நடவடிக்கைகளை எடுத்து வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு மன உறுதியை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கவும் நிரந்தரமான பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும். இந்த சமயத்தில் இந்தியாவிலும் அது போல் ஒரு மக்கள் கிளர்ச்சி நடக்க வேண்டும் என்பது போல பிரிவினைவாத, தேசவிரோத கருத்துக்களை பலர் பரப்பி வருகின்றனர்.

இவர்களுடைய நோக்கம் நமது நாடு முன்னேறக்கூடாது, நமது நாட்டின் மக்கள் அமைதியாக வாழக் கூடாது. சண்டை சச்சரவு மிகுந்து, நாடு ஒரு அமைதியின்மையை அடைந்தால் அதன் மூலம் தங்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்ற கேவலமான நோக்குடன் செயல்படுகிறார்கள். இத்தகைய தீய எண்ணம் கொண்டவர்களை அடையாளங்கண்டு உடனடியாக தேசப் பாதுகாப்பு சட்டங்களின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு வங்கதேச இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் மனிதத்தன்மை அற்ற வெறிச் செயல்களை கண்டித்தும், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு நீதி கோரியும் இந்து முன்னணி வருகிற திங்கட்கிழமை (12.8.24) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in