Published : 16 Aug 2014 12:00 AM
Last Updated : 16 Aug 2014 12:00 AM

திருச்சி முன்னாள் துணை மேயர்களை துரத்தும் கிரிமினல் வழக்குகள்

திருச்சி மாநகராட்சி துணை மேயர்களாக இருந்த அனைவரும் கடந்த சில மாதங்களாக கிரிமினல் வழக்குகளில் சிக்கி காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்துகொண்டிருக்கின்றனர். தங்களது பிரதிநிதிகளை குற்ற வழக்குகள் துரத்துவதை கவலையோடு பார்க்கின்றனர் திருச்சி மாநகர மக்கள்.

திருச்சி மாநகராட்சியில் 1996-2001 வரை எமிலி ரிச்சர்ட் துணை மேயராக இருந்தார். சுமார் 8 மாதங்கள் பொறுப்பு மேயராகவும் பதவி வகித்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜின் சகோதரியாவார். கடந்த சில தினங்களாக இவர் மீது அடுக்கடுக்காக நில அபகரிப்பு புகார்கள் திருச்சி மாநகர காவல் நிலையங்களில் வந்து குவிந்தபடி உள்ளன.

இந்த புகார்களில் பேட்டை வாய்த்தலை பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகார் மீது ஜூலை மாதம் ஒரு நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை முகப்பேரில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் கொடுத்த புகார் மீது ஆகஸ்ட் 13-ம் தேதி ஒரு வழக்கை திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறை பதிவு செய்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் அன்பழகன்

இதேபோல 2001 முதல் 2011 வரை 10 ஆண்டுகள் தி.மு.க-வைச் சேர்ந்த அன்பழகன் திருச்சி மாநகர துணை மேயராக இருந்தார்.

இவர் மீது திருச்சி மாநகர காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நில அபகரிப்பு, ஆள் கடத்தல், பணம் பறிப்பு, மோசடி, கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள் ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , அவர் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

பதவியை இழந்த ஆசிக் மீரா

2011 முதல் 2014 ஜூன் வரை திருச்சி மாநகராட்சி துணை மேயராக இருந்த ஆசிக் மீரா மீது துர்கேஸ்வரி என்கிற இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கற்பழிப்பு, கட்டாயக் கருக்கலைப்பு, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்தனர்.

அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இந்த வழக்கு காரணமாக அதிமுக தலைமையின் நடவடிக்கையின் விளைவாக துணை மேயர் பதவியையும் அவர் இழக்க நேரிட்டது.

இப்படி திருச்சியில் துணை மேயராக இருந்த அனைவரும் இந்த ஆண்டு மிக முக்கியமான குற்றச்சாட்டுகளின் பேரில் காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்துகொண்டிருக்கும் நிலையில் திருச்சியின் அடுத்த துணை மேயர் யார் என்கிற பதவிப் போட்டி, அதிமுக வட்டாரத்தில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது.

அடுத்தது யார்?

தற்போது அதிமுக தலைமை யின் நன்மதிப்பை பெற்றுள்ள எம்.பி.குமார் தரப்பில் சிலரும், மாநகரச் செயலர் மற்றும் அரசு தலைமைக் கொறடா மனோகரன் தரப்பில் ஒருவரும் இந்த பதவியை கவர்வதற்காக, காய் நகர்த்தி வருவதாகக் கூறப் படுகிறது.

ஆனால், திருச்சி உளவுப் பிரிவு போலீஸார் இப்போதைக்கு திருச்சி மாநகராட்சிக்கு துணை மேயர் தேவையில்லை. திருச்சியில் துணை மேயராக இருந்த அனைவரும் வழக்குகளில் சிக்கி தங்கள் பெயரைக் கெடுத்துக்கொண்டுள்ள நிலையில் புதிய துணை மேயர் தேர்வை தள்ளி வைக்கலாம் என மேலிடத்துக்கு குறிப்பு அனுப்பியுள்ளனராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x