

புனித வெள்ளியை ஒட்டி தேவாலயங்களில் இன்று சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது.
பாதம் கழுவும் நிகழ்ச்சி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட துக்க தினத்தை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரிக்கிறார்கள். இயேசு கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் (வியாழக்கிழமை) தாழ்மையை பறைசாற்றும் வகையில் தனது சீடர்களின் பாதங்களை கழுவி சுத்தப்படுத்தியதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வண்ணம் பெரிய வியாழன் அன்று தேவாலயங்களில் பாதிரியார்கள், பெரியோர்களின் பாதங்களை கழுவி துணியால் துடைத்து சுத்தம் செய்வர். அதன்படி, பெரிய வியாழக்கிழமையான நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியார்கள் பெரியோர்களின் பாதங்களை கழுவினர்.
இன்று புனித வெள்ளி
இயேசுவின் 12 சீடர்களை குறிக்கும் வகையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் பாதம் கழுவும் நிகழ்ச்சிக்காக 12 பெரியவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர். சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர்மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிச்சாமி முன்னிலையில் 12 பெரியவர்களின் பாதங்களை பாதிரியார்கள் கழுவி, துணியால் சுத்தம் செய்தனர். இதையொட்டி நடந்த சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், புனித வெள்ளி இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இயேசு கல்வாரி மலையில் சிலுவை சுமந்து சென்ற பாடுகளை நினைவுகூறும் வகையில், தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறுகிறது.