கோப்புப் படம்
கோப்புப் படம்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனையா? - டெலிகிராமில் பரவும் தகவலால் பரபரப்பு

Published on

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாகவும், பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறும் டெலிகிராமில் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுஆக.11-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்படநாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற் பட்டோர் தேர்வு எழுதவுள்ளனர்.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் தகவல் பரவி வருகிறது. டெலிகிராமில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட ‘PG NEET leaked material’ என்ற குழுவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் ரூ.70 ஆயிரத்துக்கு கிடைப்பதாகவும், வினாத்தாள் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும் என்று தகவல் பரவி வருகிறது.

ஏற்கெனவே இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பெரும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போதுமுதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாக பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிடம் கேட்டபோது, “நீட் தேர்வு மட்டுமல்ல; அனைத்து தேர்வுகளுக்கும் சிலதினங்களுக்கு முன்பாக வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாகடெலிகிராமில் போலியான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பணம் பறிப்பதற்காக இதுபோன்ற செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்” என்றனர்.

மத்திய அமைச்சர் மறுப்பு: இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை எக்ஸ் வலைதளப்பதிவில், “முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள்கசிவு என்று சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தால் இன்னும்வினாத்தாள் தயாரிக்கப்படவே இல்லை.

வினாத்தாள் பணத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக பரப்பியவர்கள் மீது தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் தொடர்பாக யாராவது அணுகினால் உடனடியாக காவல் துறை அல்லது தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in