Published : 16 May 2018 08:07 AM
Last Updated : 16 May 2018 08:07 AM

ராமநாதபுரம் அருகே சாலை விபத்து: சுற்றுலா வேன் - லாரி மோதல் ;குமரியை சேர்ந்த 4 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சுற்றுலா வேனும், மணல் லாரியும் நேருக்குநேர் மோதியதில் சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நாகனேந்தல் கிராமம் உள்ளது. இங்குள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற சுற்றுலா வேனும், காட்டுமன்னார்கோவிலில் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்துக்கு வந்த லாரியும் நேற்று அதிகாலை 4 மணியளவில் நேருக்கு நேர் மோதின.

இதில் சுற்றுலா வேனில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் இனயத்தைச் சேர்ந்த புஷ்பராஜ்(36), இவரது மகன் ரிபான்(9), அல்போன்ஸ் மனைவி புனிதா(32), வேன் ஓட்டுநர் ஜான்ரூஸ் மகன் ஜான் பிளசட்(24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 குழந்தைகள் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் மணல் லாரி ஓட்டுநர் திருஉத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி(37) என்பவரும் படுகாயமடைந்தார்.

இவர்கள் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிலர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x