Published : 07 Aug 2024 06:05 AM
Last Updated : 07 Aug 2024 06:05 AM
மேட்டூர்/தருமபுரி: கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து, உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120அடியை கடந்த 30-ம் தேதி எட்டியது. அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 26,000 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 22,200 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து நீர்மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு17,500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 4,500 கனஅடி என மொத்தம் 22,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ள நிலையில், தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16 கண் மதகுகள் வழியாக 4,500 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுவதால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மதகு பகுதியில் தூண்டில் வீசி மீன் பிடித்து வருகின்றனர். மேலும், 16 கண் மதகு பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஊழியர்கள் எச்சரித்தும், ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர். மேலும், சிலர் தண்ணீரில் இறங்கி குளித்துவருகின்றனர்.
ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம்காலை விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 31 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று மாலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT