Published : 07 Aug 2024 04:30 AM
Last Updated : 07 Aug 2024 04:30 AM
சென்னை: பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பனை, தென்னை மரங்களில் கள்இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், கிராமணி சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னைவள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். திரைப்பட இயக்குநர் கவுதமன், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் ஏ.எஸ்.பாபு மற்றும் 200-க்கும் மேற்பட்ட பனை, தென்னை விவசாயிகள் இதில்பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளும் வேளாண் உற்பத்தி பொருள்தான் என்பதை மதித்து தமிழக அரசு தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குமதி செய்து,விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
அதேபோல பாமாயில் உணவு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிருபிக்கப்பட்டுள்ள நிலையில், பாமாயில் விற்பனையை பொது விநியோக திட்டத்தில் இருந்து அரசு தடைசெய்ய வேண்டும்.
அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்டவற்றை பொது விநியோகத் திட்டத்தில் விற்பனை செய்வதற்கு முன்வரவேண்டும். இதை வலியுறுத்தியே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT