சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் ஏன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சவுக்கு சங்கர் | கோப்புப்படம்
சவுக்கு சங்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாய் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், “சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்,” என்று வாதிட்டார்.

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், “சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அந்த செயலைத் தடுப்பதற்காகவே குண்டர் சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,” என்று விளக்கமளித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்துக்குரியது. இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை பெற்றுத்தரலாம். அதை விடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏன் பயன்படுத்தினீர்கள்? திரைப்படங்களில் காவல் துறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. அப்படியென்றால் அனைவரும் மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை தற்போதும் பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்கு கொண்டு செல்லும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in