Published : 06 Aug 2024 02:07 PM
Last Updated : 06 Aug 2024 02:07 PM
கோவை: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்திட வேண்டும்; கேரளா அரசுக்கு தேவையான உதவிகளை துரித கதியில் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி ஏஐடியூசி சங்கங்கள் இன்று காலை போராட்டம் நடத்தினர்.
இது குறித்து ஏஐடியூசி சங்கங்கள் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜூலை 30 -ம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் மூன்று மலை கிராமங்கள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டு, மண்ணில் புதையுண்டுவிட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். வீடுகளையும் உறவுகளையும் இழந்தவர்கள் ஆயிரக்கணக்கில் மீட்கப் பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இது நாடு இதுவரை கண்டிராத மிகப் பெரிய சோக நிகழ்வாகும்.
எனவே, இதை இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். கேரள மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை 10 மணிக்கு ஏஐடியூசி சங்கங்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடிக்கு கடிதங்கள் அனுப்பும் போராட்டம் நடத்தினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட கவுன்சில் பொது செயலாளர் சி.தங்கவேல் தலைமை தாங்கினார். மேலும், பொறியியல் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.எம்.செல்வராஜ் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT