Published : 06 Aug 2024 05:11 AM
Last Updated : 06 Aug 2024 05:11 AM
நாமக்கல்: தமிழகத்தை 3 மாநிலமாகப் பிரித்தால் ரூ.45 ஆயிரம் கோடி நிதி பெற்றுத் தருவோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒருமுறைகூட கலந்துகொள்ளவில்லை. அதில் பங்கேற்று, தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களை விளக்கி, நிதி ஒதுக்கீடு கேட்டால்தானே, தமிழகம் பயன்பெற முடியும்.
வெள்ளை அறிக்கை... தமிழகத்துக்கு எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி கேட்கப்பட்டது, மத்திய பட்ஜெட்டில் எவ்வளவு கொடுக்கப்பட்டது, எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நிதிநிலை அறிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் 3-வது இடம் பெற்றது. அதற்காக நாங்கள் தமிழகத்தைப் புறக்கணிக்கவில்லை. தமிழகத்தை 3 மாநிலமாகப் பிரித்தால், ஒரு மாநிலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி வீதம், ரூ.45 ஆயிரம் கோடி நிதியைப் பெற்றுத் தருவோம்.
இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT