Published : 29 May 2018 07:41 AM
Last Updated : 29 May 2018 07:41 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காஞ்சியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்: பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை மக்கள் நம்பவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலர் அனகை முருகேசன், தெற்கு மாவட்டச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசியதாவது:

இந்த அரசு தேமுதிகவைப் பார்த்து அஞ்சுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி கேட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி கொடுக்கின்றனர். ஏன் தேமுதிகவைப் பார்த்து அஞ்ச வேண்டும்.

துப்பாக்கிச் சூடு நடந்த தூத்துக்குடிக்கு அதிமுகவினரோ, திமுகவினரோ சென்றால் மக்கள் நம்புவதில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்கச் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜு ஓரிருவரை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிட்டார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பத்திரிக்கையாளர்களை வெளியே நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தார். வெளியில் வந்து அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தி ஏதும் இல்லை என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறியுள்ளார். அதிமுக, திமுக என இரு கட்சியினருக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் பங்கு உள்ளது. அவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியது:

போராட்டத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவிவிட்டதாகவும், அதனால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அரசு சார்பில் கூறுகின்றனர். பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றிருந்தால் ரூ.20 லட்சம் நிவாரணம் எதற்கு வழங்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேமுதிகவினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x