Published : 06 Aug 2024 05:13 AM
Last Updated : 06 Aug 2024 05:13 AM

பழவேற்காடு மீனவர் மீதான தாக்குதலை கண்டித்து கடையடைப்பு

கோப்புப் படம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடல் பகுதியில் சமீப காலமாக மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், அதிநவீன விசைப் படகுகள் மூலம் மீன்பிடித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக பழவேற்காடு மீனவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் பழவேற்காடு பகுதியில் மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 41 மீனவர்களை பழவேற்காடு மீனவர்கள் சிறை பிடித்தனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ‘இனி பழவேற்காடு பகுதியில் மீன்பிடிக்க மாட்டோம்’ என்று பூம்புகார் மீனவர்கள் உறுதியளித்துச் சென்றனர்.

இச்சூழலில், நேற்று காலை பூம்புகார் மீனவர்கள் மீண்டும் பழவேற்காடு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதையறிந்த பழவேற்காடு மீனவர்கள், சம்பந்தப்பட்ட விசைப்படகை சுற்றி வளைத்து, தங்கள் பகுதியில் மீன்பிடித்ததை தட்டி கேட்டுள்ளனர். இதனால், கோபமடைந்த பூம்புகார் மீனவர்கள் பழவேற்காடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில், லோகேஷ், பிரதாப் ஆகிய மீனவர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று காலை 11 மணியளவில் பழவேற்காடு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து, மதியம் 3.30 மணியளவில் மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என 400-க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு, பசியாவரம் பாலம் அருகே பொன்னேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மீன்வளத் துறை இணை இயக்குநர் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும்ஆவடி காவல் ஆணையரக உயரதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “4 நாட்களுக்குள் பழவேற்காடு மீனவர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாகவும், பிற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு கடற்பகுதியில் இனி மீன் பிடிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, சுமார் 4 மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x