மணல் குவாரிகளை திறக்கக் கோரி சென்னையில் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி சென்னையில் வரும் 8-ம் தேதி காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் யுவராஜ், நாராயணன், தீனன், காமராஜ் உள்ளிட்டோர் கூட்டாக அளித்த பேட்டி: தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனைக்குப் பிறகு கடந்த 11 மாதங்களாக மணல் குவாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன் “மணல் குவாரிகளில் மூன்றாம் நபர் அதாவது ஒப்பந்ததாரர் தலையீடு இல்லாமல் மணல் குவாரிகளே அரசே நேரடியாக நடத்த வேண்டும்" என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தாமதமின்றி மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும்.

கட்டுமானத்திற்கு சவுடு மண்ணிற்கு கூடுதல் தேவை இருப்பதால் சவுடு மண் குவாரிகளையும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து மணல், எம்.சாண்ட் போன்றவை கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தடையின்றி சென்று கொண்டிருக்கிறது. அதுபோல ஆந்திராவில் இருந்து ஆற்று மணல் கொண்டு வர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் 55 ஆயிரம் லாரிகள் வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். பாலாற்றில் 10 ஆண்டுகளாக மணல் எடுக்கப்படவில்லை. மணல் கொட்டிக் கிடக்கும் அந்த ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

எனவே, மூடிக்கிடக்கும் 17 மணல் குவாரிகள் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வரும் 8-ம் தேதி காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மறுநாள் 9-ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in