Published : 15 May 2018 03:50 PM
Last Updated : 15 May 2018 03:50 PM

எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு ஒரு பேரிழப்பு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு ஒரு பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'மெர்க்குரிப்பூக்கள்', 'தலையணைப்பூக்கள்', 'கரையோர முதலைகள்', 'பயணிகள் கவனிக்கவும்', 'இரும்பு குதிரைகள்' என 300-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

எழுத்தாளர் பாலகுமாரனின் இறப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரன் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களையும், பல கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலகுமாரன் எழுதிய 'மெர்க்குரி பூக்கள்', 'இரும்பு குதிரைகள்' ஆகிய நாவல்கள் மிகவும் பிரபலமானவை. பாலகுமாரன் சில தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரனுக்கு 16.1.2018 அன்று நடைபெற்ற விழாவில் அவருக்கு தமிழ்த் தென்றல் திருவிக விருது வழங்கியது இன்றும் பசுமையாய் எனக்கு நினைவில் இருக்கிறது.

பாலகுமாரன் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது போன்ற பல விருதுகளையும் தனது எழுத்துப் பணிக்காக பெற்ற பெருமைக்குரியவர்.

அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவரும், இலக்கியத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

பாலகுமாரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x