முந்தைய ஆட்சியின்போது உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்கட்டண உயர்வுக்கு காரணம்: செல்வப்பெருந்தகை கருத்து

முந்தைய ஆட்சியின்போது உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்கட்டண உயர்வுக்கு காரணம்: செல்வப்பெருந்தகை கருத்து
Updated on
1 min read

வல்லக்கோட்டை: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயல் வீரர் ஆலோசனைக் கூட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு உறுப்பினர் அருள்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர்.

இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சொர்ண சேதுராமன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு உறுப்பினர் நிக்கோலஸ் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, வட்டார மற்றும் மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: தமிழக பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதை அனைவரும் சேர்ந்து சீர் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறார்; விரைவில் அனைத்து குறைகளையும் அவர் சரிசெய்வார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து இட்டதாலேயே, தற்போது மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. மின்கட்டண விவகாரத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாடு அனைத்துமே மத்திய அரசிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in