Published : 05 May 2018 09:19 AM
Last Updated : 05 May 2018 09:19 AM

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டம்: சர்க்கரை மீதான மேல்வரிக்கு தமிழக அரசு எதிர்ப்பு- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சர்க்கரை மீதான ரூ.3 மேல்வரி, எத்தனாலுக்கு வரி குறைப்பு ஆகிய மத்திய அரசின் கருத்துருக்களுக்கு தமிழக அரசு சார்பில் ஜிஎஸ்டி கூட்டத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டதாக, அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 27-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில், தமிழகத்தில் இருந்தபடியே மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றார். அவருடன், வணிகவரித்துறை செயலர் கா.பாலச்சந்திரன், வணிகவரி ஆணையர் டி.வி.சோமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் தொடர்ச்சியாக வந்த வருவாய் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் ரூ. 1 லட்சம் கோடி ஜிஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ரூ.2 ஆயிரம் கோடியை வருவாய் தாண்டியது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 21 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு தொழில்நுட்ப கட்டமைப்பை வழங்கி வரும், ஜிஎஸ்டி நெட்ஒர்க்கை முழுமையாக அரசுடைமையாக்குவதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சில சலுகைகள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. கடையில் பொருள் வாங்கும்போது, ரசீது கொடுக்காவிட்டால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ரசீது கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் 2 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும். இதில் ரூ.100 வரை கிடைக்கும்.

சர்க்கரை மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டிக்கு கூடுதலாக கிலோவுக்கு ரூ.3க்கு மிகாமல் மேல்வரி விதிக்கும் மத்திய அரசின் கருத்துருவை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி ஏற்கவில்லை. அதேபோல் எத்தனாலுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கும் கருத்துருவையும் தமிழக வரிவருவாய் பாதிக்கும் என்பதால் ஏற்கவில்லை. எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனாலுக்கு வரி குறைப்பதற்கு, உரிய சட்ட பாதுகாப்பு வழங்கினால் ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்துள்ளேன்.

வணிகர்களின் மதாந்திர விவர அறிக்கையை எளிமைப்படுத்த ஒப்புக் கொண்டோம். அப்போது சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு இந்த புதிய விவர அறிக்கை மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் வணிகர்கள், தொழில்நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் வைத்த கோரிக்கைளில், 84 கோரிக்கைகளை வலியுறுத்தினோம். அதில் 38 கோரிக்கைள் ஏற்கப்பட்டன. 46 கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தியுள்ளோம்.

ஒட்டு மொத்தமாக ஜிஎஸ்டி கூட்டங்களில், தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் 319 பொருட்களுக்கு வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 75 சேவைகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 பொருட்களுக்கும் வரியை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.

குறிப்பாக, வணிகச்சின்னம் இடப்படாத அனைத்து உணவு வகைகள், பேக்கரி பொருட்கள், பிஸ்கட்கள், தீப்பெட்டி, ஊறுகாய், ஜவ்வரிசி, பம்பு செட்கள், மீன்பிடி உபகரணங்கள், விவசாய இயந்திரங்கள், வெண்ணெய், நெய், சிப்ஸ், மிக்சர், முறுக்கு, வற்றல், ரஸ்க், சின்னமிடப்படாத பானங்கள், நன்னாரி சர்பத், கற்பூரம், ஜவுளி பொருட்கள், வெள்ளிக் கொலுசு, அரைஞாண் கயிறு, சானிட்டரி நேப்கின், தேங்காய் நாரால் செய்யப்பட்ட பொருட்கள், பட்டு ஆடைகள், அலுமினிய பொருட்கள் உள்ளிட்டவை மீதும் விரைவாக முடிவெடுக்க வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x