பரம்பிக்குளம் - ஆழியாறில் திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறப்பு: அமைச்சர்

பரம்பிக்குளம் - ஆழியாறில் திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறப்பு: அமைச்சர்
Updated on
1 min read

சென்னை: “பரம்பிக்குளம் ஆழியாறிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும்” எனஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கொங்கு மண்டலத்தில் பிரதான பாசனமாக விளங்கி வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் திருமூர்த்தி அணையின் தண்ணீர் மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. பரம்பிக்குளம் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சர்க்கார்பதியை அடைந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து தொடங்கும் 50 கி.மீ நீளமுள்ள சமமட்ட கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு நிதி ஒதுக்காத காரணத்தால் சேதமடைந்த சமமட்ட கால்வாயை சீரமைக்க அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில், ரூ.184 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு சேதமடைந்த காண்டூர் கால்வாய் பகுதிகளில் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இக்கால்வாய் சீரமைப்பு பணிக்கு முன்னர் சர்க்கார்பதியிலிருந்து 1,200 கனஅடி நீர் சமமட்ட கால்வாயில் திறந்து விடும்போது திருமூர்த்தி அணைக்கு 600 கன அடி மட்டுமே வந்து கொண்டிருந்தது. கால்வாய் சீரமைப்புக்கு பின் குறைந்தபட்சம் 1,000 கனஅடி நீர் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் (2011 -21) சமமட்ட கால்வாய் தொடர்ந்து பராமரிப்பு பணிக்கு போதுமான அக்கறை செலுத்தாததால், இயற்கை சீற்றங்களால் சேதமுற்ற கால்வாய் பகுதிகளையும் சீரமைக்க அவசியம் ஏற்பட்டது. இப்பகுதிகளை சீரமைக்கும் பொருட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கினார். இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்ததாலும் கடந்த மே மாதம் வரை கால்வாயில் தண்ணீர் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும் பராமரிப்பு பணிகள் அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

பாசனத்திற்கு அவசரநிலை கருதி ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பரம்பிக்குளம் ஆழியாறிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திலிருந்து திருமூர்த்தி அணைக்கு பாசனத்திற்கு நீர் திறப்பது காலதாமதமாகிறது என்று யாரோ சொன்ன தவறான தகவலை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் இத்துறைக்கு அமைச்சராகவும், அதில் 4 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தவர் இவ்வாறு அறிக்கை விடுவது வேடிக்கையாக உள்ளது” என அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in