திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாகிவிட்டன: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாகிவிட்டன: அண்ணாமலை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.

சமூக வலைத்தளங்களில், திமுக அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது.

காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைக் காக்க இனியும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால், தமிழக அரசியல் வரலாற்றில், கையாலாகாத முதல்வர் என்றே அறியப்படுவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in