Published : 03 Aug 2024 04:35 AM
Last Updated : 03 Aug 2024 04:35 AM
சென்னை: வயநாடு சென்றுள்ள தமிழக மருத்துவக் குழுவினர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர். கேரள மாநில வயநாட்டில் அதிககனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகியும், உடல் நல பிரச்சினை ஏற்பட்டும்முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குதவற்காக தமிழகத்தில் இருந்து 10 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் இரண்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வயநாட்டுக்கு காய்ச்சல், நோய்த் தொற்று என பேரிடர்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சை உபகரணங்கள் போதிய அளவு இரண்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
வயநாட்டில் அமைந்துள்ள கோட்டநாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தமிழக மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்டகுழந்தைகள், 300-க்கும் மேற்பட்டபெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்தஆக்சிஜன் அளவு, நாடி துடிப்பு, உடல் எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன. 500-க்கும் அதிகமான பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள சூழலை நமது மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கூடுதல் வசதிகள் வேண்டும்என்று கோரினால், கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இருந்து கூடுதல் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT