Last Updated : 13 May, 2018 10:35 AM

 

Published : 13 May 2018 10:35 AM
Last Updated : 13 May 2018 10:35 AM

சென்னை வணிக வளாகத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி: 4-வது மாடியில் இருந்து குதித்தவரை மகனாக நினைத்து காப்பாற்றினேன்- இரு கைகளாலும் தாங்கிப் பிடித்து காப்பாற்றிய காவலாளி உருக்கம்

வடபழனியில் உள்ள தனியார் மாலில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த இளைஞரை காவலாளி தனது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினார். தன் மகன் போல நினைத்துக் காப்பாற்றியதாக அவர் உருக்கத்துடன் கூறினார்.

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் ‘விஜயா ஃபோரம் மால்’ என்ற அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை அதன் 4-வது தளத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் தான் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஆவேசமாகக் கூறினார்.

அந்த வளாகத்தின் பல்வேறு தளங்களில் இருந்தவர்களும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ‘குதிக்க வேண்டாம்’ என சத்தம் போட்டனர். மக்களின் கூக்குரலைக் கேட்டு, தரை தளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி மேற்பார்வையாளர் தேவசகாயம் (46), மேலே பார்த்தார்.

இதற்கிடையில், மக்கள் சத்தம் போடுவதை கொஞ்சமும் கண்டுகொள்ளாத அந்த இளைஞர் 4-வது மாடியின் தடுப்பு மீது ஏறி குதிக்கவும் தயாராகிவிட்டார். அனைவரும் அவரை பார்த்துக் கொண்டிருக்க, 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.

தரை தளத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டே இருந்த தேவசகாயம், சற்றும் தாமதிக்காமல் அந்த இளைஞர் விழுகிற இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். பயங்கர வேகத்தில் 4-வது மாடியில் இருந்து விழுந்த இளைஞரை தனது 2 கைகளாலும் தாங்கிப் பிடித்தார்.

தேவசகாயம் மீது விழுந்த இளைஞர், அவரையும் சேர்த்துக்கொண்டு கீழே சாய்ந்தார். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். தேவசகாயத்தின் வலது கால் முறிந்தது. இளைஞரின் கை, காலும் உடைந்தது. இரண்டு பேரும் வலியால் துடித்தனர்.

தகவல் கிடைத்து வடபழனி போலீஸார் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் இருவரையும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் (27) என்று போலீஸ் விசாரணையில் தெரிந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் அறை எடுத்து தங்கி, வேலை தேடி வந்துள்ளார். எதிர்பார்த்த வேலை கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தன் உயிரைப் பணயம் வைத்து இளைஞரைக் காப்பாற்றியது குறித்து கேட்டபோது, தேவசகாயம் உருக்கமாக கூறியதாவது:

மேல்மருவத்தூர் அருகே உள்ள சிறிய கிராமம்தான் சொந்த ஊர். 11 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தேன். அசோக் நகர் 37-வது தெருவில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிக்கிறேன். மனைவி பெயர் பவானி. மகன் கவுதம் (17), பி.காம். படித்துள்ளார். மகள் காவியா 10-ம் வகுப்பு முடித்துள்ளார். 5 ஆண்டுகளாக வணிக வளாகத்தில் பணியாற்றி வருகிறேன். தற்போது காவலாளி மேற்பார்வையாளராக உள்ளேன்.

வழக்கம்போல நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தேன். அப்போது, மக்களின் சத்தம் கேட்டு மேலே பார்த்தேன். ஓர் இளைஞர் 4-வது மாடியில் இருந்து குதிக்கப் போவதாக ஆவேசமாக கூறினார். ஓடிச் சென்று அவரை காப்பாற்ற எண்ணினேன். ஆனால், அதற்கு நேரம் இல்லை என்று என் மனம் சொன்னது. அந்த இளைஞரும் அதற்குள் தடுப்பில் ஏறி, கீழே குதிக்கத் தயாராகிவிட்டார்.

அவரை யாரோ ஒரு இளைஞராக நான் கருதவில்லை. என் மகனைப் போலதான் எண்ணினேன். அந்தப் பதற்றமும், பரபரப்பு உணர்வும் என் உடல் முழுவதும் பரவியது. 4-வது மாடியில் இருந்து குதித்தால் என்ன ஆகும் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். மனம் பதைபதைத்துப் போய்விட்டது. என் உயிரைப் பணயம் வைத்தாவது, அவரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற வைராக்கியம் வந்தது.

சிறு வயதில் கிராமத்தில் ஒருவரை ஒருவர் தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவோம். அதேபோல அந்த இளைஞரையும் பிடித்துவிடலாம் என்ற எண்ணம் சிந்தனையில் ஓடியது. கீழே எந்த இடத்தில் விழுவார் என்பதை ஊகித்தேன். உடனே பாய்ந்து ஓடினேன்.

அதற்குள் அந்த இளைஞர் குதித்தே விட்டார். நடப்பது நடக்கட்டும் என்று, இரு கைகளாலும் அவரை ஏந்தி நின்றேன். 4-வது மாடியில் இருந்து விழுந்தவரைப் பிடிப்பது சாமானியமா? பாரம் தாங்காமல் சரிந்துவிட்டேன்.

பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. உடல் முழுவதும் வலிக்கிறது. என் மகனைப் போன்ற இளைஞரைக் காப்பாற்றியதில், எந்த வலியும் பெரிதாகத் தெரியவில்லை. ஓர் உயிரைக் காப்பாற்றியது பெருமையாக இருக்கிறது.

இவ்வாறு தேவசகாயம் உருக்கத்துடன் தெரிவித்தார்.

துணிச்சலாக செயல்பட்டு, இளைஞரைக் காப்பாற்றிய தேவசகாயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x