Published : 02 Aug 2024 06:45 AM
Last Updated : 02 Aug 2024 06:45 AM

போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம்: தமிழக ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம் தொடர்பாகதமிழக ஆளுநரிடம் நேரில்அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் "கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான பண்ணை மற்றும் செல்லப்பிராணிகள் நடைமுறை" என்றதலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்துஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கே.என்.செல்வகுமார் தொடங்கிவைத்தார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் சிறப்புரையாற்றினார். சென்னை கால்நடைமருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஆர்.கருணாகரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மருந்தகஇயக்குநர் டாக்டர் டி.சத்தியமூர்த்தி வரவேற்றார். நிறைவாக, கால்நடை மருத்துவக் கல்லூரி உறைவிட கால்நடை மருத்துவ பணிகள் துறையின் தலைவர் பேராசிரியர் எம்.சந்திரசேகர் நன்றி கூறினார்.

கருத்தரங்க தொடக்கவிழா முடிவடைந்த பிறகு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 295 கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் தொடர்பாக தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பது தொடர்பாக அறப்போர் இயக்கம் என்ற அமைப்பினர் புகார் தெரிவித்தனர். அந்த புகார் குறித்து விரிவாக ஆய்வுசெய்தபோது அவர்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை கண்டுபிடித்தோம். 295 கல்லூரிகளில் தவறுகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதற்கு ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரான தமிழகஆளுநரிடம் நேரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். தமிழக அரசு அமைத்த 3 பேர் கொண்ட குழுவும்விசாரணை நடத்தி வருகிறது.அந்த குழுவின் அறிக்கையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வரும் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படும். கடும்தண்டனை அளித்தால் தான் இத்தகைய தவறுகள் இனி நிகழாது. அந்த வகையில் முறைகேடு செய்தபேராசிரியர்கள் இனிமேல் எந்தகல்லூரியிலும் பணியாற்ற முடியாதவாறு அவர்களுக்கு கடும்தண்டனை வழங்கப்படும். அந்த கல்லூரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x