சென்னை | சாலை விபத்தில் காவலாளி மூளைச்சாவு: உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு

சென்னை | சாலை விபத்தில் காவலாளி மூளைச்சாவு: உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு
Updated on
1 min read

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ளமேட்டுப்பாளையம் உப்பண்டி பாபு தெருவை சேர்ந்தவர் நாராயணன்(57). தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றிவந்தார். இவரது மனைவி அம்லு. அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு4 மகன்கள் உள்ளனர்.

நாராயணன் கடந்த, 29-ம் தேதிமாலை மருத்துவமனையில் அவரது மனைவியைப் பார்த்துவிட்டு,வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்க அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு நாராயணன் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள், உடல் உறுப்புகள் தானம் அளிக்க முன்வந்தனர். அதன்படி, கல்லீரல், 2சிறுநீரகம், 2 கண்கள் என, 5 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

அதில் 4 உறுப்புகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. ஓர் உறுப்பு,தனியார் மருத்துவமனைக்கு, அரசு விதிமுறை பின்பற்றி வழங்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்த நாராயணனின் உடல் உறுப்பு தானத்தால், 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். அவரது உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in