Published : 02 Aug 2024 04:28 AM
Last Updated : 02 Aug 2024 04:28 AM
சென்னை: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளில் 2,876 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத் தொடக்கவிழா நேற்று நடந்தது.
‘இடைவெளியைக் குறைப்போம், அன்னையர் அனைவரையும் தாய்ப்பாலூட்ட ஆதரிப்போம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானமாக வழங்கிய தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சுப்ரியா சாஹூ பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்காததால் உலகளவில் சுமார் 6 லட்சம் குழந்தைகள் இறந்திருக்கின்றன. இதில், சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்துள்ளன.
குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் கொடுத்திருந்தால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தாய்ப்பால் கொடுக்காவிட்டால் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
தாய்மார்களுக்கும் பாதிப்பு: அந்த வகையில், தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மார்பகப் புற்றுநோயாலும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயாலும் உயிரிழந்துள்ளனர் என அந்தஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து தாய்மார்களும் குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்டுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரெமாசந்திரமோகன் கூறும்போது, ‘எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளில் 7,151 பேர், 2,876.1 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி உள்ளனர். பெறப்பட்ட தாய்ப்பாலில் 2,459.95 லிட்டர்4,947 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT