Published : 02 Aug 2024 04:45 AM
Last Updated : 02 Aug 2024 04:45 AM
சென்னை: சென்னை கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா குடும்பத்தினருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அதை ஒட்டியுள்ள சாலையில் சுவர் எழுப்பிபல ஆண்டுகளாக அசன் மவுலானா தரப்பினர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு சாலையை மீட்க மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அப்போது அசன் மவுலானா, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த நிலையில், அந்த இடத்தை மீட்கப் போராடி வரும் அப்பகுதி பொதுமக்களும் அங்கு கூடினர்.
அப்போது அசன் மவுலானா தரப்பினர் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகமும் மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கிருஷ்ணமூர்த்தி நகர், கணபதி தெருவில் சுவர் எழுப்பி அசன்மவுலானா குடும்பத்தினர் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். அன்றிலிருந்தே உரிய வரைபட ஆவணங்களுடன் நாங்கள் போராடி வருகிறோம்.
அரசியல் செல்வாக்குமிக்க குடும்பம் என்பதால், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்து முறையிட்டோம். அவரது அழுத்தத்தால், சில மாதங்களுக்கு முன்பு சம்பிரதாயத்துக்காக ஆக்கிரமிப்பு சுவரை மட்டும்மாநகராட்சி இடித்தது.
முழுவதுமாக மீட்கவில்லை. மீண்டும் தலைமைச் செயலரை சந்தித்துசாலை அமைக்க வலியுறுத்தினோம். பின்னர், சில தினங்களுக்கு முன்பு சாலை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர்.
அப்போது அசன் மவுலானா, குண்டர்களுடன் வந்து, மாநகராட்சி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். எங்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் மீட்புப் பணியை நிறுத்தியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஆக்கிரமிக்கப்பட்ட 120 அடி நீளம், 30 அடிஅகலம் கொண்ட சாலை மாநகராட்சிக்கு சொந்தமானது. அதை மீட்டுவிட்டோம். விரைவில்சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்க இருக்கிறோம்.
வருவாய்த் துறை ஆவணங்களைப் பார்த்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, அதன் பிறகே சாலை அமைக்க வேண்டும் என்று அசன்மவுலானா வலியுறுத்தினார்.
அதற்காக வருவாய்த் துறை உதவியைக் கோரியுள்ளோம். அங்குஉறுதியாக சாலை அமைத்து,மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்'' என்றனர்.
இது தொடர்பாக அசன் மவுலானாவிடம் விளக்கம் பெற, பல முறை முயன்றும், இந்நாளிதழ் அச்சேறும் வரை விளக்கம் பெற முடியவில்லை. இருப்பினும், அவரது தரப்பினர் கூறும்போது, ``பல ஆண்டுகளுக்கு முன்பு, அந்தஇடம் முழுவதும், அசன் மவுலானா குடும்பத்தினருக்குச் சொந்தமாக இருந்தது.
அந்தச் சாலை, மாநகராட்சிக்கே சொந்தமாக இருந்தாலும், அந்தச் சாலையை முறைப்படி அவரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். அதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசு, அசன் குடும்பத்துக்கு வழங்கி இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறாத நிலையில், இந்தச் சாலையை மாநகராட்சி உரிமை கோர முடியாது'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT